பயங்கரவாத தாக்குதல் நடந்த பைசரன் பள்ளத்தாக்கு அருகே, குண்டு துளைக்காத ஜாக்கெட் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து சென்ற நபரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ராணுவ சீருடையில் வந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-ஏ-தொய்பாவின் கிளையான ‘தி ரெசிஸ்டன்ட் ஃபோர்ஸ்’ பொறுப்பு பெற்றுள்ளது. இதையடுத்து, தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பின்னணியில் இருப்பதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளதால், இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் இருந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் குறித்து தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பயங்கரவாதத் தாக்குதல் நடந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பயங்கரவாத தாக்குதல் நடந்த பைசரன் பள்ளத்தாக்கு அருகே, குண்டு துளைக்காத ஜாக்கெட் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து சென்ற ஒருவரை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர்.
அகமது பிலால் என அடையாளம் காணப்பட்ட அந்த நபரிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்துள்ளார். குண்டு துளைக்காத ஜாக்கெட் எங்கிருந்து வந்தது என்று கேட்டபோது கூட, அவர் பதிலளிக்கவில்லை. இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த பாதுகாப்பு படையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read more: காஷ்மீரில் ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.. பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து கோர விபத்து..!!