ஜம்மு காஷ்மீரில் நேற்று நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலில் காயம் அடைந்த ஆறு இந்திய விமானப்படை வீரர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று மாலை 6 மணியளவில் இந்திய விமானப் படை வீரர்களை ஏற்றிக் கொண்டு 2 வாகனங்கள் ஷாசிதார் அருகே சென்ற போது பயங்கரவாதிகள் வாகனத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தப் பகுதி எல்லை மாவட்டத்தில் உள்ள சூரன்கோட்டின் சனாய் டாப் மற்றும் மெந்தரின் குர்சாய் பகுதிக்கு இடையே உள்ளது என்றனர்.
காயமடைந்த வீரர்கள் விமானப் படை ஹெலிகாப்டர்களில் சிகிச்சைக்காக உதம்பூருக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். மெந்தார் பகுதியில் 37 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் (RR) உடன் ஒரு விமானப் படை பிரிவு இணைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், விமானப் படை வீரர்களும் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தி பதிலடி கொடுத்தனர். 5 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகிலுள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஒருவர் உயிரிழந்தார். 4 பேருக்கு சிகிச்சை அழிக்கப்படுகிறது. தொடர்ந்து உள்ளூர் பாதுகாப்புப் படையினர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆதாரங்களின்படி, தேடுதல் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ராணுவத்தின் சிறப்புப் படைகளுடன் 37 RR மற்றும் அருகிலுள்ள பிற பிரிவுகளும் ஈடுபட்டுள்ளன. தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து கடந்த சில நாட்களாக மெந்தார் மற்றும் சூரன்கோட் இடையேயான பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தேடுதல் வேட்டையின் போது, தாக்குதல் நடைபெற்றுள்ளது.
ஏ.கே ரக துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி அருகில் உள்ள அடர்ந்த காடுகளுக்கு தப்பிச் சென்றதாக கூறப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு படை வாகனம் பெரும் சேதம் அடைந்தது. பூஞ்ச் மாவட்டம் அனந்த்நாக்-ரஜோரி நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.
மே 25 அன்று அங்கு தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறும் சூழலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது. தீவிரவாதிகளில் இந்த திடீர் தாக்குதலையடுத்து ஜம்மு – பூஞ்ச் நெடுஞ்சாலையில் இந்திய ராணுவம் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டுள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீரில் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.