திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டை உறுப்பினர்கள் அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் e KYC மூலம் பதிவினை மேற்கொண்டு பயன்பெறலாம்.
இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் செயல்படும் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெறும் ஏஏஒய்(AAY) மற்றும் பிஎச்ச்(PHH) குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து பயனாளிகள் தங்களது கைவிரல் ரேகை பதிவினை e-KYC (electronic Know Your Customer) சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடையில் 31.03.2025-க்குள் பதிவு செய்திட வேண்டும் என சென்னை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏஏஒய்(AAY) மற்றும் பிஎச்ச்(PHH) பயனாளிகளின் குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது கைவிரல் ரேகையினை 31.03.2025 ஆம் தேதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டும். எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏஏஒய்(AAY) மற்றும் பிஎச்ச்(PHH) பயனாளிகளின் குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் அத்தியாவசியப் பொருட்கள் பெறும் நியாய விலைக்கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
eKYC பதிவு
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்-2013-ன் கீழ் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்களின் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் தொடர்பான e-KYC பதிவானது கைவிரல் ரேகை அல்லது கண்கருவிழி படிப்பு முறையில் நியாயவிலைக்கடைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. PHH குடும்ப அட்டை வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்களில் உள்ள குடும்ப உறுப்பினர்களும், AAY குடும்ப அட்டை வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்களில் உள்ள குடும்ப உறுப்பினர்களும், தங்களது e KYC பதிவினை பலர் அப்டேட் செய்யாமல் உள்ளனர்.
எனவே. e-KYC பதிவு மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் சம்மந்தப்பட்ட நியாயவிலைக்கடையிலும், வெளியூர், வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் நபர்கள் தாம் வசிக்கும் பகுதியின் அருகாமையிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு சென்று IMPDS, eKYC மூலம் அனைத்து குடும்ப உறுப்பினர்கள் தங்கள் பதிவினை மேற்கொள்ள முடியும். இந்தப் பணிகளை முடிக்காவிட்டால் நீங்கள் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவது சிரமமாகிவிடும். இல்லையென்றால் ரேஷன் கார்டு ரத்து செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.