ஹிமாச்சல பிரதேசம், அசாம், கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் உள்ள நான்கு மாடிக் கட்டிடம் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்தது.. சோபால் சந்தையில் மதியம் 12.30 மணியளவில் கட்டிடம் இடிந்து விழுந்தது என்று பேரிடர் மேலாண்மை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், கட்டிடம் இடிந்து விழுவதற்கு முன்னர் அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
UCO வங்கியின் ஒரு கிளை, ஒரு ஹோட்டல், ஒரு பார் மற்றும் வேறு சில வணிக நிறுவனங்கள் கட்டிடத்தில் அமைந்திருந்தன. 2வது சனிக்கிழமை என்பதால், கட்டிடத்தின் மேல் தளத்தில் அமைந்துள்ள வங்கிக்கு விடுமுறை விடப்பட்டது, சம்பவத்தின் போது வங்கியில் பணிபுரியும் ஏழு ஊழியர்களில் யாரும் இல்லை என்று சிம்லாவில் உள்ள யூகோ வங்கியின் மண்டலக் கிளையின் தலைமை மேலாளர் ரமேஷ் தத்வால் தெரிவித்துள்ளார்..
அந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள பாரில் அமர்ந்திருந்த சிலர் ஜன்னல் கண்ணாடிகளில் திடீரென விரிசல் இருப்பதைக் கண்டனர்.. ஆபத்தை உணர்ந்த அவர்கள் உடனடியாக வெளியே ஓடி, பார் மற்றும் தாபாவில் அமர்ந்திருந்த மற்றவர்களை எச்சரித்தததால் அங்கிருந்த அனைவரும் வெளியேறிவிட்டனர்.. இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது..