இந்தியாவில் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மறைமுக வரியை மாற்றிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 50வது கூட்டம் இன்று நடைபெற உள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டு வரும் வேளையில் இந்த ஸ்பெஷலான 50வது கூட்டத்தில் முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
இதில் முக்கியமாக நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் ஆன்லைன் கேமிங் மீதான வரி விதிப்பு மற்றும் ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைப்பது போன்ற பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டி வரி விகிதங்கள், ஜிஎஸ்டி வரி விலக்குகள், வரம்புகள் மற்றும் நிர்வாக நடைமுறைகள் போன்ற பல்வேறு ஜிஎஸ்டி தொடர்பான முக்கிய பிரச்சினைகளை தீர்மானிப்பதில் இந்த கவுன்சில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடர்ந்து நடக்கும் காரணத்தால் முக்கியமான மாற்றங்கள் உரிய நேரத்தில் செய்யப்படுகிறது.
திரையரங்குகளில் விற்கப்படும் உணவு மற்றும் பானங்களின் விலை இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் மூலம் குறையலாம். மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (MAI) அமைப்பு, சினிமா தியேட்டர்களில் விற்கப்படும் சில உணவு மற்றும் பானங்களின் வரிகளை தற்போது நடைமுறையில் உள்ள 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்க கோரிக்கை வைத்துள்ளது.
கேன்சர் சிகிச்சைக்கான dinutuximab / qarziba ஆகிய மருந்துகளைத் தனிநபர் இறக்குமதி செய்ய பயன்படுத்தும் பட்சத்தில் இதற்கான 12 சதவீத IGST ரத்து செய்யப்பட வேண்டும் என பிட்மென்ட் கமிட்டி ஜிஎஸ்டி கவுன்சில்-க்கு பரிந்துரை செய்துள்ளது. இதேபோல் 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகளை Crowdfunding வாயிலாகப் பணம் திரட்டி வாங்கும் போது இதற்கான ஜிஎஸ்டி ரத்து செய்யலாம்.
வத்தல் / குடல் போன்ற unfried snack pellets மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாகக் குறைக்கலாம் என பிட்மென்ட் கமிட்டி ஜிஎஸ்டி கவுன்சில்-க்கு பரிந்துரை செய்துள்ளது.செயற்கைக்கோள் வாயிலான இண்டர்நெட் சேவைகள் இந்தியாவில் அறிமுகமாகும் பணிகள் துவங்கப்பட்டு இருக்கும் வேளையில் இதற்கு ஜிஎஸ்டி வரி தள்ளுபடி செய்யப் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான குழு ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம் மற்றும் கேசினோ ஆகியவற்றுக்கு வரி விதிப்பை அதிகரிக்க ஜிஎஸ்டி கவுன்சில்-க்கு பரிந்துரை செய்துள்ளது. மூன்று விளையாட்டுகளுக்கும் 28% ஜிஎஸ்டி விதிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளது, ஆனால் கோவா அரசு 18 சதவீத வரி விதிப்பைக் கோரியுள்ளது.
இந்தியாவில் தற்போது டிரெண்டாகி வரும் MUV எனப்படும் மல்டி யுடிலிட்டி வாகனங்கள், XUV எனப்படும் கிராஸ்ஓவர் யுடிலிட்டி வாகனங்கள் மீது 22 சதவீத செஸ் வரி விதிக்கப்பட உள்ளது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. இதற்கு 3 காரணிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் 4 மீட்டர் நீளம், 1500 சிசி-க்கும் அதிக திறன் கொண்ட இன்ஜின், 170mm கிரவுன்ட் கிளியரென்ஸ் இருந்தால் 22 செஸ் வரி விதிக்கப்பட உள்ளது.இதேபோல் இந்தியாவில் காட்டுத்தீ போலப் பரவி வரும் ONDC தளத்தில் இருக்கும் சப்ளையர்கள் மீதான TCS வரி விதிப்பு குறித்தும் ஆலோசனை செய்து முடிவு செய்யப்பட உள்ளது. TCS வரி விதித்தால் கட்டாயம் ONDC-யில் கிடைக்கும் சேவைகளின் விலை அதிகரிக்கும்.