மேற்கு வங்க மாநில பாஜகவின் மாநில துணைத் தலைவராக பொறுப்பு வகித்த நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் பேரனான சந்திரகுமார் போஸ் பாஜகவில் இருந்து விலகியுள்ளார்.
நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் பேரனான சந்திரகுமார் போஸ் மேற்கு வங்க மாநில பாஜகவின் மாநில துணைத் தலைவராக பொறுப்பு வகித்தவர். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பாஜகவில் இணைந்தார். மேலும் 2016-2020 ஆம் ஆண்டு வரை மேற்கு வங்க மாநில பாஜகவின் துணைத் தலைவராக பொறுப்பு வகித்தவர்.
சந்திரகுமார் போஸ் தேசிய குடியுரிமை திருத்தச்சட்டம் உள்பட பல்வேறு விவகாரங்களில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். இதனை தொடர்ந்து, 2020ம் ஆண்டு பாஜக துணைத்தலைவர் பதவியில் இருந்து சந்திரகுமார் போஸ் நீக்கப்பட்டார். ஆனாலும், அவர் பாஜகவில் தொடர்ந்து நீடித்து வந்தார். இந்நிலையில் பாஜகவின் உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகியுள்ளார்.
பாஜகவில் இருந்து விலகியது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனது வழிகாட்டி மற்றும் தாத்தா சுபாஷ் சந்திர போஸின் சகோதரரான சரத் சந்திர போஸின் 134 வது பிறந்தநாளில் இந்த முக்கியமான நான் எடுத்துள்ளேன். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை மற்றும் வளர்ச்சித் திட்டத்தால் ஈர்க்கப்பட்டு நான் 2016 இல் பாஜகவில் இணைந்தேன். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது சகாக்கள் மதச்சார்பற்ற சித்தாந்தத்தை அடிப்படியாக கொண்ட சுதந்திர இந்தியாவுக்கான போராடினார்கள். அனைத்து சமூகங்களையும் இந்தியராக ஒன்றிணைக்கும் நேதாஜியின் சித்தாந்தத்தைப் பிரச்சாரம் செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டு பாஜகவின் கட்டமைப்பிற்குள் செயல்பட்டேன்.
மதச்சார்பற்ற இந்தியாவை பாதுகாக்கும் முயற்சிகளுக்கு மத்திய பாஜக மற்றும் மேற்கு வங்க பாஜகவிடம் இருந்து எனக்கு எந்த ஆதரவையும் கிடைக்கவில்லை. மேலும் மேற்கு வங்கத்தில் பாஜகவின் கட்சியை வலுப்படுத்த “மேற்கு வங்க அரசியல் வியூகம்” எனும் விரிவான திட்டத்தை முன்வைத்தேன். எனது முன்மொழிவுகள் புறக்கணிக்கப்பட்டன. இந்த துரதிர்ஷ்டவசமான சூழலில்தான் பாஜகவின் உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன் “ என சந்திர குமார் போஸ் தெரிவித்துள்ளார்.