உலக கத்தோலிக்கர்களின் தலைவராக திகழ்ந்த முன்னாள் போப் அரசர் 16 ஆம் பெனடிக்ட்டின் இறுதிச் சடங்குகள் வாடிகனில் நடைபெற்றது.
16-ம் பெனடிக்ட் இவரது இயற்பெயர் ஜோசப் ரட்சிங்கர். கடந்த 1977 முதல் 1982 வரை ஜெர்மனியின் முனிச் உயர் மறைமாவட்ட பேராயராக பதவியில் இருந்தார். கடந்த 2005ம் ஆண்டு முதல் 2013 வரை போப் ஆண்டவராக இருந்த இவர் கடந்த 2013-ம் ஆண்டு வயது முதிர்வு காரணமாக போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகினார். கடந்த 1415-ம் ஆண்டுக்கு பிறகு போப் ஆண்டவர் பதவியில் இருந்து தாமாக பதவி விலகியவர் 16-வது பெனடிக் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு அவர் வாட்டிகனில் உள்ள குருமார்களின் மடத்தில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார்.
இந்த நிலையில் 95 வயதான 16-வது பெனடிக்கிற்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக வாடிகனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 31ம் தேதி, வாட்டிகனில் உள்ள மேட்டர் எக்லேசியா மடாலயத்தில் சிகிச்சைப் பலனின்றி அவர் காலமானார். போப் 16ம் பெனடிக்கின் உடல், கடந்த 5 நாட்களாக பொதுமக்களின் அஞ்சலிக்காக வாடிகனில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் வைக்கப்பட்டு பின்னர் பாரம்பரிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக போப் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் உலகம் முழுவதும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு போப் ஆண்டவர் 16 ஆம் பெனடிக்கிற்கு அஞ்சலி செலுத்தினர்.