ஆங்கிலேயர்கள் திராவிடர் என்பதை ஒரு இனமாக கருதி தவறாக குறிப்பிட்டுள்ளதாக நிகழ்ச்சி ஒன்றில் தமிழக ஆளுநர் என்.ஆர்.ரவி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையில் ட்ரைபல் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற என்.ஆர்.ரவி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், ’’திராவிடம் என்பது இனம் என்று ஆங்கிலேயரால் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதை தற்போதும் பின்பற்றி வருகின்றனர். இந்தியாவின் வடக்கே அரியமும் தெற்கே வாழ்ந்தவர்களை திராவிடம் என பாடப்புத்தகத்தில் படித்து வருகின்றோம். பழங்குடியின மக்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநில அளவில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகின்றது.
8 கோடி மக்கள் இருக்கும் தமிழ்நாட்டில் 8 லட்சம் பேர் இருக்கும் பழங்குடியின மக்களுக்கு ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகின்றது. இதை கருத்தில் கொள்ள வேண்டும்’’ என தெரிவித்தார். இதனிடையே நிகழ்ச்சியின்போது மாணவி ஒருவர், ’’காவல்துறை அதிகாரியாக வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்’’ என்று ஆளுநரை கேட்டார். இதற்கு பதில் அளித்த ஆளுநர் ’’முதலில் நன்றாக படிக்க வேண்டும். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் இப்படி இருந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் நீங்கள் விரும்பிய காவல் அதிகாரியாக வரலாம்’’ என பதில் அளித்தார்.
என்.ஆர்.ரவி சனாதானம் பற்றியும், திராவிடம் பற்றியும் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சி எம்.பிக்கள் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவரிடம் கொடுத்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளது பரபரப்பாகியுள்ளது.