நுகர்வோர் பாதுகாப்பு விதிகள், 2021ஐ மீறியதாகக் கண்டறியப்பட்ட 17 நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு (நேரடி விற்பனை) விதிகள், 2021ஐ மீறியதாகக் கண்டறியப்பட்ட 17 நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவற்றில் 13 நிறுவனங்கள் மீதான புகார்கள் தற்போது விசாரணையில் உள்ளன. மூன்று நிறுவனங்களிடமிருந்து பதில் எதிர்பார்க்கப்படுகிறது. நுகர்வோர் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, நேரடி விற்பனை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல், தொடர்புடைய சட்ட கட்டமைப்புடன் இணங்குவதை உறுதி செய்தல் ஆகியவற்றில் சிசிபிஏ தனது கவனத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக, இந்த நேரடி விற்பனை நிறுவனங்களின் வலைத்தளங்களை ஆணையம் கவனமாக ஆய்வு செய்தது.
நேரடி விற்பனை என்பது நிலையான சில்லறை விற்பனை என்பதிலிருந்து விலகி, நுகர்வோருக்கு நேரடியாக பொருட்கள் அல்லது சேவைகளை சந்தைப்படுத்துதல், விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்யும் முறையாகும். இந்த முறை நேரடி விற்பனையாளர்கள் என அழைக்கப்படும் தனிப்பட்ட பிரதிநிதிகளை நம்பியுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு (நேரடி விற்பனை) விதிகள், 2021 ஐ மத்திய அரசு அறிவித்தது. நேரடி விற்பனை நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதற்கும் ஒரு விரிவான கட்டமைப்பை நிறுவியது.
இந்த விதிகள் நேரடி விற்பனைத் துறையில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நெறிமுறை நடைமுறைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன, இதனால் நுகர்வோர் தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது. இருப்பினும், சில மோசடி நிறுவனங்கள் சட்டவிரோத பண சுழற்சி திட்டங்களை ஊக்குவிக்க நேரடி விற்பனை மாதிரியை தவறாகப் பயன்படுத்துகின்றன. இதனைத் தவிர்க்க, நுகர்வோர் விழிப்புடன் இருக்கவும், நேரடி விற்பனை தொடர்பான சந்தேகத்திற்குரிய சட்டவிரோத நடவடிக்கைகள் அல்லது மீறல்களை பொருத்தமான அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.