பிரதமரின் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் (பி.எம்.போஷன்) பொருள் செலவு அதிகரிப்புக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இது குறித்து வெளியான அறிவிப்பில்; பிரதமரின் ஊட்டச்சத்து திட்டம் என்பது மத்திய அரசின் நிதியுதவி திட்டமாகும். இதன் கீழ் 10.36 லட்சம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பால் வாடி மற்றும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 11.20 கோடி மாணவர்களுக்கு சூடான சமைத்த ஒரு வேளை உணவு வழங்கப்படுகிறது. ஊட்டச்சத்து ஆதரவு மற்றும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். பிரதமரின் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ், உணவை சமைக்கத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு ‘பொருள் செலவு’ வழங்கப்படுகிறது.
தொழிலாளர் அமைச்சகத்தின் தொழிலாளர் பணியகம், இந்த பொருட்களுக்கான பணவீக்கம் குறித்த தரவுகளை நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் வழங்குகிறது. நாட்டின் 20 மாநிலங்களில் உள்ள 600 கிராமங்களின் மாதிரியில் இருந்து தொடர்ச்சியான மாதாந்திர விலைகள் குறித்த தகவல்களை சேகரித்து அதன் அடிப்படையில் சண்டிகரில் உள்ள தொழிலாளர் பணியகத்தால் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் ஊரகத் தொழிலாளர் வழங்கப்படுகிறது.
தொழிலாளர் பணியகம் வழங்கிய பணவீக்க குறியீட்டின் அடிப்படையில், மத்திய கல்வி அமைச்சகம், ‘பொருள் செலவை’ 9.50% உயர்த்தியுள்ளது. புதிய செலவு விகிதம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 01.05.2025 முதல் பொருந்தும். இந்த உயர்வின் காரணமாக 2025-26 நிதியாண்டில் தோராயமாக ரூ.954 கோடி கூடுதல் செலவை மத்திய அரசு ஏற்கும்.
உணவுக்குத் தேவையான மூலப்பொருள் செலவு விகிதங்கள் குறைந்தபட்ச கட்டாய விகிதங்களாகும், இருப்பினும், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தங்கள் நிர்ணயிக்கப்பட்ட பங்கை விட அதிகமாக பங்களிக்க சுதந்திரம் உள்ளது. ஏனெனில் சில மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் பிரதமரின் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் அதிகரித்த ஊட்டச்சத்துடன் உணவை வழங்குவதற்காக தங்கள் சொந்த வளங்களிலிருந்து குறைந்தபட்ச கட்டாய பங்கை விட அதிகமாக பங்களித்து வருகின்றன.
மூலப்பொருள் விலையுடன் கூடுதலாக 26 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை மத்திய அரசு இந்திய உணவுக் கழகம் மூலம் வழங்குகிறது. சுமார் 100 சதவீத மானியம் உட்பட உணவு தானியங்களுக்கான செலவை மத்திய அரசு ஏற்றுக் கொள்கிறது. இது ஆண்டுக்கு ரூ.9000 கோடியாகும். இந்திய உணவுக் கழகத்தின் கிடங்கிலிருந்து பள்ளிகளுக்கு உணவு தானியங்களை கொண்டு செல்வதற்கான செலவை 100% இந்திய அரசு ஏற்கிறது. இத்திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் உட்பட அனைத்து கூறுகளையும் சேர்த்த பிறகு ஒரு வேளை உணவு செலவு பால் வாடிகா மற்றும் தொடக்க வகுப்புகளுக்கு தோராயமாக ரூ.12.13 மற்றும் உயர் தொடக்க வகுப்புகளுக்கு ரூ .17.62 ஆக உள்ளது.