முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கிற்கு டெல்லியில் நினைவிடம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீர் மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இரவு 9.51 மணி அளவில் காலமானார்.
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். டெல்லி யமுனை நதிக்கரையில் சீக்கிய மத முறைப்படி இன்று காலை முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் கட்ட இடம் ஒதுக்கி அங்கேயே இறுதிச் சடங்கு செய்ய பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதி இருந்தார். தற்போது மன்மோகன் சிங்கிற்கு டெல்லியில் நினைவிடம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், இடம் ஒதுக்கப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.