ஏப்ரல் – ஜூன் காலாண்டில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது..
சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.. இந்த சிறுசேமிப்பு திட்டங்கள் தான் நடுத்தர மக்களின் பிரதான முதலீடாக உள்ளது. குழந்தைகள், படிப்பு செலவு, திருமண செலவு என பல்வேறு எதிர்கால செலவினங்களுக்காக மக்கள் இந்த சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர்.. இந்த சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டு அடிப்படையில் நிதி அமைச்சகத்தால் மதிப்பாய்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

அந்த வகையில் தற்போது மத்திய அரசு பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை 70 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தி உள்ளது.. மத்திய நிதியமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கும் நிதியாண்டின் அடுத்த காலாண்டில் இருந்து பொருந்தும். தேசிய சேமிப்புச் சான்றிதழ், கிசான் விகாஸ் பத்ரா, மாதாந்திர வருமான சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு இந்த வட்டி விகித உயர்வு பொருந்தும்.. எனினும் தபால் நிலைய சேமிப்பு கணக்கு மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றின் வட்டி விகிதங்கள் மட்டும் முறையே 7.1 சதவீதம், 4 சதவீதம் என மாற்றப்படாம உள்ளது.
திருத்தப்பட்ட விகிதங்களின்படி, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்கான வட்டி 8% லிருந்து 8.2% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், கிசான் விகாஸ் பத்ராவுக்கு 7% லிருந்து 7.2% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர வருமானக் கணக்குத் திட்டத்திற்கான வட்டி விகிதத்தையும் 7.1% லிருந்து 7.4% ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
மேலும் சுகன்யா சம்ரிதி திட்டத்தின் வட்டி விகிதம் 7.6%லிருந்து 8%ஆக உயர்த்தப்பட்டுள்ளது.. தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தின் வட்டி விகிதம் 7%லிருந்து 7.7%ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.. தபால் நிலைய ஆர்.டி திட்டத்திற்கான வட்டி விகிதம் 5.8%லிருந்து 6.2%ஆக உயர்த்தப்பட்டுள்ளது.. இதன் மூலம் சிறுசேமிப்பு திட்டங்களில் பணம் சேமிக்கும் சாமானிய மக்கள் கூடுதல் வட்டியை பெறலாம்..