fbpx

28 சுங்க சாவடிகளின் சுங்கக்கட்டண உயர்வு..!! – அன்புமணி கண்டனம்

தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்கிறது. கடந்த ஜூனில் தமிழ்நாட்டில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு 5% வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை எலியார்பத்தி, ஓமலூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா உள்பட 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. சுங்கக்கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இந்நிலையில், செப்டம்பர் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை சிறப்பாக பராமரிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள விக்கிரவாண்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளின் சுங்கக் கட்டணம் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 7% வரை உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட சிக்கல்களால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்திலுள்ள பெரும்பாலான சுங்கச் சாவடிகளின் கட்டணத்தை உயர்த்துவது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளின் குறுக்கே 67 சுங்கச்சாவடிகளும், மாநில நெடுஞ்சாலைகளில் 7 சுங்கச்சாவடிகளும் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் 62 சுங்கச்சாவடிகளில் 34 சுங்கச்சாவடிகளில், மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த பிறகு கடந்த ஜூன் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. மீதமுள்ள விக்கிரவாண்டி, மொரட்டாண்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் வாகனங்களைப் பொறுத்து 5% முதல் 7% வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப் படும்; ரூபாய் அடிப்படையில் பார்த்தால் குறைந்தது ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.150 வரை கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டுக்கான உயர்வு மிகவும் அதிகம் ஆகும். 2008 ஆம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண (நிர்ணயம் மற்றும் வசூல்) விதிகளின் அடிப்படையில் தான் ஒவ்வொரு ஆண்டும் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்பது அனைவரும் அறிந்தது தான்.

ஆனால், சுங்கக்கட்டண வசூல், கட்டண உயர்வு ஆகியவற்றில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை. சாலை அமைப்பதற்காக செய்யப்பட்ட செலவு எவ்வளவு? அதில் எடுக்கப்பட்ட முதலீடு எவ்வளவு? என்பது குறித்த எந்த விவரமும் வெளியிடப்படாமல் காலவரையின்றி சுங்கக்கட்டணம் செலுத்த மக்களை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கட்டாயப்படுத்துவது நியாயமல்ல.

தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கக்கட்டணத்தில் 60% மட்டும் தான் அதற்காக செய்யப்பட்ட முதலீட்டை ஈடு செய்வதற்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. மீதமுள்ள 40% தொகை பராமரிப்புக்காக செலவிடப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான சாலைகள் பராமரிக்கப்படுவதே இல்லை. சென்னை & திருச்சி நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களுக்கு முதுகுவலி ஏற்படுவது உறுதி. சென்னை & பெங்களூர் சாலையில் சென்னை முதல் வாலாஜா வரை பயணிப்பதற்குள் வாழ்நாள் துன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்க வேண்டியிருக்கும். நெடுஞ்சாலைகளை முறையாக பராமரிக்கத் தவறும் நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு சுங்கக்கட்டணத்தை உயர்த்துவதற்கு தார்மீக ரீதியில் எந்த உரிமையும் கிடையாது.

தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டும் தான் இருக்க வேண்டும் என்பது விதியாகும். அதன்படி பார்த்தால் தமிழகத்தில் அதிகபட்சமாக 20 சுங்கச்சாவடிகள் மட்டும் தான் இருக்க வேண்டும். ஆனால், இப்போது 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. 2021&ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த போது மத்திய அரசுடன் பேச்சு நடத்தி தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 32 சாவடிகள் மூடப்படும்; 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே செயல்படும் என்று தமிழக நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்பிறகு 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், புதிதாக 19 சுங்கச்சாவடிகள் தொடங்கப்பட்டிருக்கின்றனவே தவிர ஒரு சுங்கச்சாவடி கூட மூடப்படவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கூட்டணி அமைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றுகின்றன.

சுங்கக் கட்டண உயர்வு வாகனம் வைத்திருப்பவர்களை மட்டும் தான் பாதிக்கிறது என்பது தவறான வாதம் ஆகும். சுங்கக்கட்டண உயர்வைத் தொடர்ந்து தனியார் பேருந்துகளின் கட்டணங்கள் உயர்த்தப் படும். சரக்குந்துகளின் வாடகை உயர்த்தப்படும் என்பதால் அதற்கு இணையாக அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரக் கூடும். உணவு தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் ஏற்கனவே கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவது அவர்களின் துயரத்தை மேலும் அதிகரிக்கும்.சுங்கக்கட்டணங்களை உயர்த்துவதற்கு ஒரே ஒரு நியாயமான காரணம் கூட இல்லை. எனவே, செப்டம்பர் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை சிறப்பாக பராமரிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

Read more ; பாலிகிராஃப் சோதனை என்றால் என்ன?. அது ஏன் நீதிமன்றத்தில் செல்லுபடியாகாது?

English Summary

The central government should cancel the customs duty hike that will be implemented from September 1. Anbumani Ramadoss has insisted that national highways in Tamil Nadu should be well maintained.

Next Post

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்.. அவள் வந்துவிட்டாள்..!! பிரித்தானிய நடிகரை கரம் பிடித்தார் எமிஜாக்சன்!!

Mon Aug 26 , 2024
Actress Amy Jackson held hands with her longtime boyfriend Ed Westwick yesterday.

You May Like