வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடலோர பகுதியை நோக்கி நகர தொடங்கியுள்ளதாகவும், இதன் காரணமாக மிக கனமழை வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த இரு தினங்களில் மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று வடகடலோர தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக கனமழை எச்சரிக்கை
குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேபோல் நாளை (டிசம்பர் 19) தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 20ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று வடதமிழக கடலோரப்பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று அவ்வப்போது மணிக்கு 35 – 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : விரட்டி விரட்டி கொட்டிய மலை தேனீக்கள்..!! பரிதாபமாக உயிரிழந்த கூலித்தொழிலாளி..!! 4 பேர் படுகாயம்..!!