கூகுளின் AI ஓவர்வியூ மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில் நகைச்சுவையின் அடிப்படையிலேயே பதில் அளிக்கப்பட்டதாக கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
தற்போது எங்கு பார்த்தாலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை நாம் அதிகம் கேள்விப்படுகிறோம். பல துறைகளில் இந்தத் தொழில்நுட்பம் கால்தடம் பதிக்கத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு துறையின் போக்கையும் இந்த தொழில்நுட்பம் முற்றிலுமாக மாற்றிவிட்ட நிலையில், கல்வித்துறையிலும் பல மாற்றங்களைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை அவர்களே உருவாக்கி பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அதன்படி google-ல் சமீபத்தில் நடந்த I/O 2024 நிகழ்வில், தன் பயனர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. கூகுள் தேடுபொறியில் பயனர்கள் AI Overview அம்சத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்தது.
இந்த அம்சத்தை பல பயனர்கள் முயற்சித்துப் பார்த்த நிலையில், அது வழங்கிய தவறான தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகின்றன. பயனர் ஒருவர் கூகுள் ஏஐ-யிடம், பீட்சாவில் சீஸ் ஒட்டவில்லை என கூறி அதற்கு தீர்வு கேட்டுள்ளார். அதற்கு நச்சுத்தன்மையற்ற பசையை உபயோகிக்க கூறி கூகுள் ஆலோசனை கூறியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து கூகுள் செய்தி தொடர்பாளர், தனியார் செய்தி நிறுவனத்திடம் விளக்கம் அளித்துள்ளார். அதில், இப்படியான சில பதில்கள் நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்டது என்றும், நகைச்சுவை தளமான தி ஆனியன் எழுதிய கட்டுரைகளின் அடிப்படையில் இந்த பதில்களை கூகுள் ஓவர்வியூ பயனர்களுக்கு அளித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
கூகுள் ஏஐ நன்றாக வேலை செய்வதாகவும், சில வினாக்களுக்கு மட்டுமே பயனர்கள் எதிர்பார்க்கும் பதில்கள் கிடைக்கவில்லை என நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கூகுள் ஏஐ ஓவர்வியூவில் உள்ள சில கொள்கை மீறல்களும் கண்டறியப்பட்டு அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூகுள் விளக்கம் அளித்துள்ளது.
காளான் வளர்ப்பில் தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் சாப்ட்வேர் பிரதர்ஸ்..!