உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டம் ஜஸ்ரா என்ற கிராமத்தில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி இளைஞர் ஒருவரின் திருமண ஊர்வலம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மிகப் பிரம்மாண்டமாக திருமணமும் நடந்து முடிந்தது. பின்னர், பிப்ரவரி 25ஆம் தேதி புதுமணப்பெண் தனது மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், அன்று இரவு முதலிரவு எல்லாம் நடந்து முடிந்து மறுநாள் காலையில் அந்த பெண் வழக்கம் போல வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார்.
ஆனால், அன்று மாலை அந்த பெண்ணுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பமாக இருப்பதாக கூறி புதுமாப்பிள்ளை வீட்டாருக்கு அதிர்ச்சி கொடுத்தனர். மேலும், உடனே ஆப்ரேஷன் செய்ய வேண்டுமென கூறியுள்ளனர். இதையடுத்து, அவருக்கு ஆப்ரேஷன் செய்து பெண் குழந்தை பிறந்தது.
இதனால், ஆத்திரமடைந்த மாப்பிள்ளை வீட்டார், பெண்ணின் வீட்டார் மீது குற்றம்சாட்டினர். மேலும், அந்த பெண்ணை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளனர். ஆனால், “இவர்களுக்குக் கடந்தாண்டு மே மாதமே திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும் அவ்வப்போது நேரில் சந்தித்து வந்துள்ளனர். இதன் காரணமாகவே எனது மகள் கர்ப்பமடைந்து இருப்பார்” என பெண்ணின் வீட்டார் கூறியுள்ளனர்.
ஆனால், இதை மாப்பிள்ளையே திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இனி அந்த பெண்ணை மனைவியாக ஏற்கும் மனநிலையில் தான் இல்லை என்றும் கூறியுள்ளார். இருப்பினும் தங்கள் பெண்ணின் கர்ப்பத்திற்கு மாப்பிள்ளையே காரணம் என பெண் வீட்டார் கூறி வரும் நிலையில், எங்கள் மகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என எச்சரித்துள்ளனர்.