குரூப்-2 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்திலும், குரூப்-4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்திலும் வெளியாகும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 5,529 காலி பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் 2A முதல்நிலை தேர்வு கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 11,78,163 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1,83,285 பேர் தேர்வினை எழுதவில்லை. சுமார் 9,94,878 பேர் தேர்வு எழுதினர். அதாவது 84.44% பேர் இந்த தேர்வை எழுதினர். அதற்கான தேர்வு முடிவு ஏற்கனவே வெளியிட்டு இருந்த அறிவிப்பின்படி, ஜூன் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பில், அக்டோபர் மாதம் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவையர் உள்பட குரூப்-4 பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு கடந்த ஜூலை மாதம் 24 -ம் தேதி நடந்தது. இந்த தேர்வை 18 லட்சத்து 50 ஆயிரத்து 471 பேர் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவு அக்டோபர் மாதம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் மாதத்தில் தான் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

