Modi Emotional: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் தனக்கு உணர்ச்சிப்பூர்வமானது. ஏனென்றால் அம்மாவின் மறைவுக்குப் பிறகு தனக்கு நடந்த முதல் தேர்தல் இது என்று பிரதமர் மோடி உருக்கமாக பேசியுள்ளார்.
18வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஜூன் 1ஆம் தேதியுடன் 7 கட்டங்களாக நிறைவு பெற்றது. இதையடுத்து, நேற்று (ஜூன் 4) மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரவு 9 மணி நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 233 இடங்களிலும் முன்னிலை வகித்தது.
இந்தநிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, “பாஜக மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி. அதேபோல், தேர்தல் சிறப்பாக நடைபெற உதவியவர்களுக்கும் நன்றி. வடக்கு முதல் தெற்குவரை பாஜக மீது மக்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால் தான் 3வது முறையாக வெற்றி பெற்றுள்ளோம். மோடியின் மீதும், மோடியின் திட்டங்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை உள்ளது.
எனது தாயார் மறைவுக்குப் பிறகு நான் சந்தித்த முதல் தேர்தல் இது. 2019ஆம் ஆண்டு பாஜக மீது மக்கள் வைத்து இருந்த நம்பிக்கையை 2024-ல் காப்பாற்றியுள்ளோம். இந்த வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. பாஜகவை வெற்றி பெற வைத்த ஒடிசா மக்களுக்கு நன்றி என்று உருக்கமாக பேசியுள்ளார்.
Readmore: மகளிர் உரிமைத் தொகை!! புதிய ரேஷன் கார்டுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!!