தேனியைச் சேர்ந்த சித்ரா (35) கோவை சின்ன தடாகம் மாரியம்மன் கோயில் வீதியில் தங்கி ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் சித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இவரும் திருமணம் செய்யாமல் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர். இதற்கிடையே, சித்ராவுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த மதுரைவீரன் (37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் நெருக்கமானது. இதனால், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
வழக்கம்போல் கடந்த 29ஆம் தேதி சின்னதடாகத்தில் உள்ள வீட்டில் சித்ராவும், மதுரை வீரனும் தனிமையில் உல்லாசமாக இருந்தனர். அப்போது, சித்ரா ஏற்கனவே மற்றொரு இளைஞருடன் கள்ளக்காதலில் இருப்பது குறித்து மதுரைவீரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த மதுரை வீரன் வீட்டில் இருந்த கத்திரிக்கோலால் சித்ராவின் கழுத்து, வாய், வயிறு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சித்ரா அங்கேயே உயிரிழந்தார். பின்னர் மதுரை வீரன் வீட்டை பூட்டிவிட்டு அங்கிருந்து தனது சொந்த ஊரான திண்டுக்கல்லுக்குச் சென்று விட்டார்.
எப்படியும் சிக்கிவிடுவோம் என அஞ்சிய மதுரை வீரன், நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அதன்பிறகே சித்ரா கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளியே தெரியவந்தது. பின்னர் அங்கு சென்ற கோவை தடாகம் போலீசார் உடலை மீட்டனர். மேலும், மதுரைவீரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.