விவசாயிகள் பயன்பெறும் வகையில் 50 விழுக்காடு மானிய விலையில் பாரம்பரிய நெல் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் கடந்த இரண்டு தமிழகத்தில் ஆண்டுகளாக வேளாண்மைக்கென்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து, தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை வேளாண்மை – உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தி வருகிறது. மரபுசார் நெல் ரகங்களைப் பாதுகாக்கும் வகையில் 2021-2022ஆம் நிதியாண்டில் நெல் ஜெயராமனின் மரபுசார் ’’நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம்’’ எனும் திட்டம் தமிழ்நாட்டில் முதன்முதலாக வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி அறுவதாம் குறுவை, ஆத்தூர் கிச்சிலி சம்பா, செங்கல்பட்டு சிறுமணி, கருடன் சம்பா, கருங்குறுவை, கருப்பு கவுனி, கீரை சம்பா, கொல்லன் சம்பா உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்களைத் திரட்டி, பலமடங்காக பெருக்கி, விவசாயிகளுக்கு விநியோகம் செய்து, அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், தேனி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலுள்ள 33 அரசு விதைப்பண்ணைகளில் 15 பாரம்பரிய நெல் ரகங்கள் 200 மெட்ரிக் டன் அளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இந்த பாரம்பரிய நெல் விதைகள், நடப்பாண்டில் பத்தாயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், 50 விழுக்காடு மானியத்தில் விநியோகம் செய்யப்படவுள்ளது. அதிகபட்சமாக கிலோவுக்கு 12 ரூபாய் 50 காசுகள் என்ற மானிய விலையில், ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைகள், அதிகபட்சமாக 20 கிலோ மட்டுமே என்ற அடிப்படையில் விநியோகிக்கப்படும். இத்திட்டமானது சென்னை மற்றும் நீலகிரி தவிர அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.