தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்திற்கான காலை மற்றும் மதிய உணவு பட்டியல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, பதிவு செய்யப்பட்ட கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும். அந்த வகையில், கடந்த ஆண்டு அக்டோபரில் தவெகவின் முதல் மாநில மாநாடு முடிந்த கையோடு கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அரசியல் கட்சி தொடங்கி இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் விஜய், கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை இன்று நடத்தவிருக்கிறார்.
கட்சியின் விதிமுறைப்படி 15 நாட்களுக்கு முன்பு தேதி அறிவிக்கப்பட்டு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல், வாட்ஸ் அப் மற்றும் தபால் மூலம் தனித்தனியாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் என மொத்தமாக 2,150 பேர் பங்கேற்க இருக்கிறார்கள் என்று கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி நிர்வாகிகள் அனைவரும் காலையிலேயே வந்து விட வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காலை 10 மணிக்கு தொடங்கும் பொதுக்குழு கூட்டம், நண்பகல் ஒரு மணி வரை நடைபெறுகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில், தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை, அரசு ஊழியர்கள் போராட்டம், இரு மொழிக் கொள்கை, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து தீர்மானங்கள் கொண்டுவரப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மொத்தமாக 15 முதல் 20 தீர்மானங்கள் வரை கொண்டு வர வாய்ப்புள்ளது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்திற்கான காலை மற்றும் மதிய உணவு பட்டியல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. காலை டிபன் 1,500 பேருக்கும், மதிய உணவு 2,500 பேருக்கும் வழங்கும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி காலை உணவாக உறுப்பினர்களுக்கு பொங்கல், வடை, சட்னி, சாம்பார், டீ வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் மதிய உணவாக வெஜ் மட்டன் பிரியாணி, சாதம், சைவ மீன் குழம்பு, சாம்பார், மிளகு ரசம், உருளை பட்டாணி வறுவல், தயிர் வடை, அப்பளம், வெத்தலை பாயாசம், இறால் 65, இஞ்சி துவையல், தயிர் பச்சடி, சப்பாத்தி+ பன்னீர் பட்டர் மசாலா, அவியல், பகோடா, மோர், ஐஸ்கிரீம், ஆனியன் மணிலா, மால் பூவா ஸ்வீட், வெஜ் சூப், ஊறுகாய் ஆகிய உணவுகள் வழங்கப்பட உள்ளது.