தனியார் பள்ளியில் பணி புரிந்து வந்த ஆசிரியர் குடும்ப பிரச்சனை காரணமாக 9வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஓட்டேரி ஸ்டாரன்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (48). இவரின் மனைவி தேவிகா (37). புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு தக்சன்யா (19), தர்ஷிகா (12) என்ற மகள்கள் உள்ளனர். கணவன் மனைவி இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களால பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில் இருவரும் பேசி கொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை இருவருக்கும் இடையே மீண்டும் தகறாரு ஏற்பட்டுள்ளது.
இதன்பிறகு கணவரின் செல்போனுக்கு தொடர்புகொண்ட ஆசிரியை, இனி நான் உங்களுடன் வாழ விரும்பவில்லை. தற்கொலை செய்துகொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் பதற்றம் அடைந்த தினேஷ், மனைவியின் செல்போனுக்கு தொடர்புகொண்டபோது போனை எடுக்கவில்லை. பின்னர் குடியிருப்பு கட்டிடத்தின் 9வது மாடியில் இருந்து தேவிகா குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மனைவி உடலை பார்த்த கணவன் மற்றும் மகள்கள் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் புளியந்தோப்பு உதவி கமிஷனர் ராஜா, ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ரமேஷ் சம்பவ இடத்துக்கு வந்து தேவிகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். குடும்ப பிரச்னையில் 9வது மாடியில் இருந்து குதித்து ஆசிரியை தற்கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்.. 6,000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி..!! – மாவட்ட நிர்வாகம்