நீட் தேர்வெழுதுவதற்கு முன்பு உள்ளாடைகளை களைய சொன்னதாக கூறிய மாணவியின் குற்றச்சாட்டை தேசிய தேர்வு முகமை நிராகரித்துள்ளது.
மருத்துவ படிப்பில் சேர்வதற்கான இளநிலை நீட் தேர்வு நேற்று முன் தினம் நாடு முழுவதும் நடைபெற்று முடிந்தது. நாடு முழுவதும் ஏராளமான மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். பல சோதனைகளுக்கு பிறகே மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அந்தவகையில், கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு வந்த மாணவிகளின் உள்ளாடையை களைய சொல்லி சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நீட் தேர்வு எழுதிய மாணவியின் தந்தை ஒருவர் கொட்டாரக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.. அந்த புகாரில் மாணவர்கள் மனரீதியாக சித்திரவதை செய்யப்பட்டதாகவும், தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ) ஆடை கட்டுப்பாடு உள்ளாடைகளை அகற்றுவதை பரிந்துரைக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்…
குறைந்தபட்சம் 90 சதவீத மாணவர்கள் பரீட்சைக்கு முன் தங்கள் உள்ளாடைகளை கழற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், அவற்றை ஒரு ஸ்டோர் ரூமில் கொட்டும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் மாணவியின் தந்தை தனது புகாரில் கூறியிருந்தார்..
இந்நிலையில் தேசிய தேர்வு முகமை இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.. நீட் தேர்வின் போது அல்லது தேர்வு முடிந்த உடன் உள்ளாடை களைய சொன்னது தொடர்பாக தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை என்றும், இது தொடர்பாக எந்த மின்னஞ்சலும் / புகாரும் பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளது..
தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் “ உள்ளாடைகளை களைய சொன்னதாக ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில், சம்மந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர் மற்றும் சுயாதீன பார்வையாளர் மற்றும் நகர ஒருங்கிணைப்பாளர் ஆகியோரிடம் இதுகுறித்து உடனடி கருத்துகள் பெறப்பட்டது.. அந்த மையத்தில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்று அவர்கள் மூவரும் கூறியுள்ளனர். மாணவியின் பெற்றோரால் கூறப்படும் எந்தவொரு செயலையும் நீட் தேர்வு ஆடை கட்டுப்பாட்டு வழிமுறை அனுமதிக்காது என்றும் தெரிவித்துள்ளது..
இதற்கிடையில், கேரளாவைச் சேர்ந்த மக்களவை எம்பி என்.கே.பிரேமச்சந்திரன், தேர்வு வழிகாட்டுதல்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர் “ இத்தகைய மனிதாபிமானமற்ற மற்றும் காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்குப் பதிலாக முறைகேடுகளை கண்டறிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். மனித உரிமை மீறல்களை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்..” என்று தெரிவித்துள்ளார்..