சீனாவில் லாட்டரியில் கிடைத்த பணத்தில் முன்னாள் மனைவிக்கு பிளாட் வாங்கி கொடுத்த கணவரை விவாகரத்து செய்ய இரண்டாவது மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
சீனாவை சேர்ந்தவர் ஸோ, இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு லாட்டரியில் 10 மில்லியன் யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.12.13 கோடி பரிசு விழுந்துள்ளது. இதில் வரிகளுக்கு பிடித்தம் போக 10.22 கோடி ரூபாயை ஸோ வைத்துள்ளார். ஆனால் இந்த முழுதொகை குறித்து தனது மனைவி லின்னிடம் இருந்து மறைக்கவேண்டும் என்று எண்ணியுள்ளார். அதன்படி, 2.42 கோடி ரூபாயை தனது மூத்த சகோதரிக்கு அனுப்பியுள்ளார். இதேபோல், தன்னிடம் இருந்த தொகையில் இருந்து 7 லட்சம் ரூபாயை எடுத்து தனது முன்னாள் மனைவிக்கு ஒரு பிளாட் வாங்கு கொடுத்துள்ளார்.
இதனை அறிந்துகொண்ட ஸோவின் இரண்டாவது மனைவி லின், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், ஸோவுக்கும் தனக்குமான சொத்தில் சரிபாதி பங்கை பிரித்து கொடுக்கவேண்டும் என்றும் தன்னிடம் மறைத்து அவரது சகோதரிக்கும் முன்னாள் மனைவிக்கும் கொடுத்த 2.7 மில்லியன் யுவானில் இருந்து மூன்றில் ஒரு பங்கையும் ஸோவிடம் இருந்து பிரித்து தரவேண்டும் என்று மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள வென்ஸோ நீதிமன்றம், ஸோவுக்கு வழங்கப்பட்ட லாட்டரி பணத்தில் அவரது மனைவியான லின்னிற்கும் உரிமை இருக்கிறது என்றும் இருவருக்கும் பொதுவான சோ அபகரித்ததாகவும் எனவே லாட்டரியில் விழுந்த பணத்தில் இருந்து 60 சதவீதத்தை மனைவி லின்னிற்கும் கொடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது