சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஒரு மாணவரும், மாணவியும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது, அங்கு அடையாளம் தெரியாத 2 பேர் வந்து மாணவனை தாக்கியுள்ளனர். மாணவனை அடித்து துரத்திவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலன் கொடுத்த புகாரின் பேரில் விசாரணையை தீவிரப்படுத்திய காவல் துறையினர், பல்கலைக்கழக சிசிடிவிகளில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 30 சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
விசாரணைக்கு பிறகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அங்கு படிக்கும் சக மாணவர்களா அல்லது வெளியில் இருந்து வந்த நபர்களா என்பது தெரிய வரும். பாலியல் சீண்டலுக்கு ஆளான மாணவி மற்றும் அவரது நண்பர் என இருவரும் கேமராவின் பார்வையிலிருந்து மறைந்து இருந்ததால் அந்த பகுதியில் நடந்தது பற்றி முழுமையான வீடியோ பதிவுகள் இல்லை.
மாணவிகளுக்கான பாதுகாப்பு குழு ஏற்கனவே பல்கலைக்கழகத்தில் உள்ள நிலையில், மூத்த ஆண், பெண் பேராசிரியர்கள் ரகசியமாக பாலியல் அத்துமீறல் குறித்து மாணவர்கள் மற்றும் மாணவிகளிடம் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் முகத்தை ஸ்கார்ப் மூலம் மறைத்து கொண்டு வந்ததால் அவரை அடையாளம் காண முடியவில்லை.
மாணவியிடம் அடையாள அணிவகுப்பு நடத்திய பின்னர், மாணவி கொடுத்த அடையாளங்களை வைத்து ஒருவரை தனிப்படை போலீசார் பிடித்துள்ளனர். மேலும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக நான்கு காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனி படை அமைக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Read more ; அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பலாத்காரம்.!! – அண்ணாமலை கடும் கண்டனம்