நடிகர் திலகம் சிவாஜி வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கடந்த 1959ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் வாங்கிய வீட்டிற்கு அன்னை இல்லம் என பெயரிட்டார். இதனைத் தொடர்ந்து, சிவாஜிக்கு செவாலியே விருது வழங்கப்பட்டதை அடுத்து, அவர் வீடு இருந்த தெற்கு போக் சாலை என்ற பெயர், செவாலியே சிவாஜி கணேசன் சாலை என பெயர் மாற்றம் செய்தது சென்னை மாநகராட்சி. சிவாஜியின் இல்லத்துக்கு தாய் ராஜாமணி நினைவாக அன்னை இல்லம் என்று பெயரிட்டார்.
அங்குதான் அவர் வாழ்ந்தார். ஆனால், அந்த வீடு அவருடைய மகன் வாங்கிய கடனுக்காக ஜப்தி செய்யப் போவதாக செய்திகள் வெளியானது. இது அவரது குடும்பத்தார் மட்டுமின்றி, அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சிவாஜியின் பேரன் துஷ்யந்த், பங்குதாரராக உள்ள தயாரிப்பு நிறுவனம் வாங்கிய கடனுக்காக அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை நீக்கக் கோரி பிரபு தாக்கல் செய்துள்ள மனுவில், “தனது தந்தை உயிருடன் இருந்தபோதே அன்னை இல்லத்தை தனக்கு உயில் எழுதி வைத்து பத்திரம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சகோதரர் ராம்குமார் தொடர்புடைய நிதி பிரச்சனைகளில் தனது வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும், வீட்டில் ராம்குமாருக்கு எந்த உரிமையும் இல்லாததால் ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்க வேண்டும் என்றும் நடிகர் பிரபு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சிவாஜி கணேசன் இல்லம் மீது எந்த உரிமையும் பங்கும் இல்லை என பிரமான பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறத்துள்ளது. தொடர்ந்து அன்னை இல்லத்தை தனது சகோதரர் பிரவுக்கு தந்தை சிவாஜி உயில் எழுதியிருப்பதால் எனக்கு எந்த உரிமையும் இல்லை என ராம் குமார் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி அப்துல் குத்தூஸ் விசாரித்து வந்தார். நடிகர் பிரபு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அன்னை இல்லம் வீட்டின் மீது ஒரு முழுமையான உரிமைதாரர் பிரபு மட்டும் தான். அந்த வீட்டின் மீது ராம்குமாருக்கு எந்த தொடர்பும் இல்லை என்று வாதிட்டார்.
மேலும் நீதிமன்றம் கருணை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவுக்கு வெகு காலத்திற்கு முன்பாகவே அந்த வீட்டை நடிகர் சிவாஜி கணேசன் நடிகர் பிரபுவுக்கு உயில் எழுதி கொடுத்திருக்கிறார். அந்த அடிப்படையில் பத்திரப்பதிவும் நடைபெற்றிருக்கிறது என்று குறிப்பிட்டார். எனவே நீதிமன்றம் ஜஸ்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பல கோடி ரூபாய் மதிப்பிலான 22 கிரவுண்டு பரப்பிலான அமைந்திருக்கக்கூடிய அந்த அன்னை இல்லம் வீட்டை ராம்குமார் தனது உரிமையை விட்டுக்கொடுத்தார் என்பதை நம்ப முடியவில்லை என்றும், இந்த சொத்தின் உரிமையானது நடிகர் பிரபுவிதம் இருக்கிறதா என்பதை முழுமையான விசாரணைக்கு பிறகுதான் முடிவு செய்ய முடியும் என்பதால், இந்த ஜப்தி உத்தரவை ரத்து செய்யக்கூடாது என்று வாதிட்டார்.
இதனையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அப்துல் குத்தூஸ், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி நடிகர் பிரபு தாக்கல் செய்த மனுமீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிவாஜி வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நடிகர் பிரபு தான் சிவாஜியின் வீடான அன்னை இல்லத்திற்கு முழு உரிமையாளர் என தெரிவித்த நீதிமன்றம் வில்லங்கப் பதிவில் நீதிமன்ற ஜப்தி உத்தரவை நீக்க பதிவுத் துறைக்கு உத்தரவிட்டது.