தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் விரிவாக பதிலளித்து வருகின்றனர். பரபரப்பாக அவையின் அலுவல்கள் நடைபெற்று வரும் நிலையில், திமுக எம்.எல்.ஏ உதய சூரியன் எழுப்பிய கேள்வியும் அதற்கு அமைச்சர் தெங்கம் தன்னரசு அளித்த பதிலும் சட்ட சபையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
அந்த வகையில், திமுக எம்.எல்.ஏ. பேரவையில் எழுந்து கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். ”ஒரு பழமொழி சொல்வார்கள்.. காலையில் இஞ்சி.. நண்பகல் சுக்கு .. மாலையில் கடுக்காய் உண்பேல்.. காலை வீசி கோலை வீசி குலுங்கி நடப்பேல் என்று சொல்வார்கள். கடுக்காய் சாப்பிட்டவர்கள் மிடுக்காய் நடப்பார்கள் என்று சொல்வார்கள். எங்கள் கல்வராயன் மலையிலும் சேலம் மாவட்டத்தில் இருக்கும் சின்ன கல்வராயன் மலையிலும் அதிகமாக கடுக்காய் விளைகிறது. சிறிய தரகர்களால் அந்த பழங்குடியின மக்களுக்கு உரிய தொகை கிடைக்காமல் இருக்கிறது. ஆகவே, சாயம் தயாரிப்பதற்கும் மருத்துவ குணமும் கொண்ட கடுக்காய் தொழிற்சாலையை எங்கள் மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் தொகுதி கல்வராயன் மலையில் உருவாக்கி தருவதற்கு அமைச்சர் முன்வருவாரா? என்று அறிய விரும்புகிறேன்” என்று கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ”உறுப்பினரின் கோரிக்கைக்கு அரசு கடுக்காய் கொடுக்காமல் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். நகைச்சுவை உணர்வுடன் அமைச்சர் அளித்த பதிலைக் கேட்டதும் அவையில் இருந்த உறுப்பினர்கள் சிரித்தனர்.