கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட மருமகனை, தண்டனையிலிருந்து காப்பாற்றியுள்ளார் மாமியார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு மாமியார் வீட்டில் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சுப்பிரமணி, வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து, தனது மாமியாரின் முதுகில் வெட்டியுள்ளார். இதையடுத்து, மாமியார் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுப்பிரமணி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சேலம் மகளிர் நீதிமன்றம், சுப்பிரமணிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கடந்த மே 25ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்பிரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சுப்பிரமணி சார்பில் வழக்கறிஞர் பாலாஜி ஆஜராகி, மனுதாரரும் அவரது மாமியாரும் சமாதானமாகி விட்டதாகவும், எனவே மனுதாரரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் மாமியாரும், மனுதாரரின் மனைவியும் குழந்தைகளும் நீதிமன்றத்திற்கு வந்துள்ளதாகவும் கூறினார். அப்போது, மனுதாரரின் மாமியார், மனைவி மற்றும் 3 குழந்தைகள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். தனது மகள், மருமகனுடன் வாழ வேண்டும். குழந்தைகளை வளர்க்க வேண்டும். எங்களுக்குள் சமாதானம் ஆகிவிட்டது. மருமகனை நான் மன்னித்து விட்டேன். அவரை விடுதலை செய்யுங்கள் என்று மாமியார் மனுத்தாக்கல் செய்தார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், “கணவருக்கும் மனைவிக்கும் இடையே ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதில் ஐகோர்ட் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தலாம் என்று ஜோஷி என்பவர் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட பிறகும் ஐகோர்ட் குடும்ப பிரச்சனையில் அதிகாரத்தை பயன்படுத்தலாம். இந்த வழக்கில், கொலை முயற்சி மற்றும் கொடுங்காயம் விளைவித்தல் பிரிவில் மனுதாரருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் குற்றம் நடந்துள்ளது. இப்போது, மாமியார் மன்னித்து விட்டதால் மருமகனான மனுதாரரை விடுதலை செய்கிறேன்” என்று கூறினார்.