மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது வாலிபர் ஒருவர் பட்டாக் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். அப்போது கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் பகுதியில், இன்று அதிகாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரண்டு பேரை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். மற்றோரு நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மதிச்சியம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தாக்கப்பட்ட் இருவரும் மதுரை ஆழ்வார்புரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக், மற்றும் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் சோனை என்பது தெரியவந்தது. நண்பர்களான இருவரும் மதுரை மதிச்சியம் பகுதியில் ஆடை தேய்த்துக் கொடுக்கும் கடை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்னை, முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் இடத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடைபெற்றதால் கள்ளழகரை காண வந்த பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.