உள்நாட்டுச் சந்தையில் சர்க்கரையின் இருப்பு குறைவாக உள்ளதால் வரும் நாட்களில் சர்க்கரை விலை புதிய உச்சத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அகில இந்திய சர்க்கரை வர்த்தக சங்கம் 2022-23 ஆண்டுக்கான சர்க்கரை உற்பத்தி மதிப்பீட்டை 34.5 மில்லியன் டன்னிலிருந்து 33.5 மில்லியன் டன்னாக (மெட்ரிக் டன்) குறைத்துள்ளதாக உணவுச் செயலர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்தார். மகாராஷ்டிராவில் காலம் தவறி பெய்த பருவமழை, எத்தனால் உற்பத்திக்கு சர்க்கரையை பயன்படுத்துவது போன்ற காரணங்களால் சர்க்கரை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது..
பெயர் வெளியிட விரும்பாத வேளாண் வணிக நிர்வாகி ஒருவர் இதுகுறித்து பேசிய போது “ சர்க்கரை உற்பத்தி குறைவாக இருப்பதை அறிந்தோம். மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் ஆலைகள் முன்கூட்டியே மூடப்பட்ட பிறகு சந்தை திடீரென எழுந்துள்ளது, இது உள்நாட்டு சந்தையில் சர்க்கரை விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்..” என்று தெரிவித்தார்..
தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, மகாராஷ்டிராவில் 190 ஆலைகளும், கர்நாடகாவில் 71 ஆலைகளும் கரும்பு அரவையை நிறுத்தியுள்ளன. இரு மாநிலங்களிலும் உள்ள ஆலைகள் 31 மார்ச் 2023 வரை முறையே கிட்டத்தட்ட 104 மில்லியன் டன் மற்றும் கிட்டத்தட்ட 53 மில்லியன் டன் கரும்பு அரவை செய்யப்பட்டது..
ஆனால் தற்போது கரும்பு அரவை நிறுத்தப்பட்டதால் மகாராஷ்டிராவில் சர்க்கரை உற்பத்தி 13.8 மில்லியன் டன்னிலிருந்து 10.5 மில்லியன் டன்னாகவும், கர்நாடகாவில் 6.3 டன்னில் இருந்து 5.6 டன்னாகவும் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டு சந்தைகளில் மேலும் சர்க்கரை இருப்பு குறையும்.. கடந்த சில வாரங்களாக சர்க்கரை விலை உயர்ந்து வரும் நிலையில், வரும் நாட்களில் சர்க்கரை விலை புதிய உச்சத்தை எட்டக்கூடும் என்று கூறப்படுகிறது.