இன்ஸ்டாகிராமில் பழகி 13 வயது மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதாக லாரி டிரைவரை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றை சேர்ந்த லாரி டிரைவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 13 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் இன்ஸ்டாகிராமில் பழகியுள்ளனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இருவரும் நேரில் சந்தித்துள்ளனர். அங்கு வைத்து அந்த நபர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தாராம்.
இது குறித்து யாரிடமும் கூறக் கூடாது என்றும் மீறினால் குடும்பத்துடன் கொலை செய்துவிடுவேன் என முரளி மிரட்டியதாக தெரிகிறது. இதனால் பயந்த மாணவி, தன்னை முரளி பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்துள்ளார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறியதை அடுத்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மாணவியிடம் விசாரித்த போது, இன்ஸ்டாகிராமில் பழகிய முரளி தன்னை பலாத்காரம் செய்து மிரட்டியதாக கூறினார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸார் முரளி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து அந்த நபரை கைது செய்தனர்.