44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்க, ஜூலை 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு இணைய வழியில் நடந்த போட்டியில் இந்தியாவும்-ரஷ்யாவும் கோப்பையை பகிர்ந்து கொண்டன. இந்தாண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. ரஷ்யாவில் நடைபெற இருந்த விளையாட்டுப் போட்டிகளை உக்ரைன் மீதான போர் காரணமாக அங்கு நடத்தப்படமாட்டது என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்திருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் 1927ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஒருமுறை கூட இந்தியாவில் நடத்த வாய்ப்பு கிடைக்காத நிலையில், தற்போது 2022ஆம் ஆண்டுக்கான ஏலத்தில் வென்றதன் மூலம் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெறவுள்ளது.
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் ஜூலை மாதம் 27ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு முழு வீச்சில் செய்து வருகிறது. இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்க, ஜூலை 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.