பெண் ஒருவர் சிறையில் இருக்கும் தன்னுடைய கணவரை காண்பதற்காக சிறைக்கு சென்றபோது, அங்கே பணியில் இருந்த சிறை காவலர் ஒருவர், அந்த பெண்ணை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு, உல்லாசத்திற்கு அழைத்துள்ளார்.
இது பற்றி சிறை நிர்வாகத்திடம் புகார் வழங்கியபோது, சிறை நிர்வாகம் அந்த சிறை காவலரை அனுசரித்துப் போக வேண்டும் என்று அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சேலம் மத்திய சிறையில் தான் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. மேலும், இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் வழங்கியிருக்கிறார். அது பற்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நாமக்கல்லைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அவரை பார்ப்பதற்காக கடந்த மாதம் 25ஆம் தேதி அவருடைய மனைவி சிறைக்கு வந்தபோது, அங்கே பணியில் இருந்த சிறை காவலர் விஜயகாந்த் என்பவர், அந்த பெண்ணின் கைபேசி எண்ணை வாங்கி வைத்துக்கொண்டு, பின்னர் அந்த கைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். இதன் காரணமாக, அந்த பெண்மணி கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.
இதனால், விரக்தி அடைந்த அந்த பெண்மணி, மறுமுறை தன்னுடைய கணவரை பார்த்த சமயத்தில், இது பற்றி அவரிடம் கூறியிருக்கிறார். அதன் பிறகு நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் இது பற்றி புகார் மனுவும் வழங்கி இருக்கிறார் அந்த பெண்மணி. அந்த புகார் மனுவின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.