கருமுட்டை திருட்டு மற்றும் மோசடி சம்பவங்கள் அண்மைக் காலமாக வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், மற்றுமொரு சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குடும்ப தகராறில் கணவனை பிரிந்து வாழும் பெண்ணிற்கு அடைக்கலம் தருவதாக கூறி, அவரிடம் இருந்து கருமுட்டையை கொடுக்குமாறு வலியுறுத்தி துன்புறுத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது ஈரோட்டில் நடைபெற்ற கருமுட்டை விற்பனை சம்பவத்திற்கு பிறகு வெளிவந்துள்ள மற்றொரு சம்பவம் ஆகும்.
சென்னை எர்ணாவூர் பகுதியில் வசித்து வரும் 22 வயது ஸ்ருதிக்கு திருமணமாகி இரண்டு வயதில் குழந்தை இருக்கிறது. கணவர் விஜயுடன் சில நாட்களாக தகராறு ஏற்பட்டிருக்கிறது. இருவருக்கும் தகராறு முற்றிய நிலையில், ஸ்ருதி தனது கணவரை பிரிந்து வீட்டை விட்டு வெளியில் வந்துவிட்டார். கணவரிடம் இருந்து விலகி வந்து நிர்கதியாக நின்ற ஸ்ருதிக்கு, அவரது தோழியான ஐஸ்வர்யா தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா, தனது கணவர் சூரஜ் என்ற ஜெனிஸ் கண்ணாவுடன் திருவொற்றியூர் பகுதியில் வசித்து வருகிறார்.

ஐஸ்வர்யாவும் அவரது கணவரும், தங்கள் வீட்டில் தங்கியிருந்த ஸ்ருதியை வேலைகள் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர். மேலும், வேலைக்காரியைப் போல் கொடுமைப்படுத்தியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. அதோடு, ஸ்ருதியின் கருமுட்டையை தருமாறு அழுத்தம் கொடுத்துள்ளனர். அதற்கு ஸ்ருதி மறுக்கவே, தங்கள் பேச்சை கேட்குமாறு சொல்லி, துன்புறுத்தி அடித்ததாக கூறப்படுகிறது. தம்பதிகளான ஜெனிஸ் கண்ணா மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் ஸ்ருதியை அடித்து தாக்கியதாகவும், கத்தியின் பின்புறத்தால் அடித்து கொடுமைப்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ஜெனிஷ் கண்ணா மற்றும் ஐஸ்வர்யா வெளியில் சென்ற நேரத்திற்காக காத்திருந்த ஸ்ருதி, சரியான சந்தர்ப்பம் கிடைத்ததும், வீட்டில் இருந்து தப்பித்து ஓடி வந்து தனது கணவர் விஜய்க்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் இருவரும் உடனடியாக திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு சென்று ஐஸ்வர்யா மற்றும் அவரது கணவர் ஜெனிஸ் கண்ணா மீது புகார் அளித்துள்ளார். ஸ்ருதியும் அவரது கணவர் விஜயும் அளித்த புகாரின் அடிப்படையில், திருவொற்றியூர் போலீசார், ஜெனிஸ் கண்ணா மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.