பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஏதாவது குறைகள் இருந்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார.
இது குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தின் ஆணையர் தாரேஸ் அகமது அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில்; சுதந்திர தினமான 15-ம் தேதி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் எனப்படும் “ஆவாஸ் பிளஸ்” பட்டியலிலிருந்து 2021-22 ஆம் ஆண்டிற்கு 2,89,887 வீடுகள் மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் அந்தந்த மாவட்டத்திற்கு ஊராட்சி வாரியாக, மத்திய அரசால் இலக்கு நிர்ணையம் செய்யப்பட்டதில் அனுமதி ஆணை வழங்கப்பட்ட பயனாளிகளின் பட்டியலையும், மீதம் வழங்கப்பட வேண்டிய பயனாளிகளின் பட்டியலையும் கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறவேண்டும்.
பயனாளிகள் பட்டியல் ஊராட்சி மன்ற அலுவலக வெளிப்புறச் சுவற்றில், மக்கள் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டுள்ளதை உறுதி செய்தல் வேண்டும். நிரந்தர காத்திருப்போர் பட்டியல் மற்றும் ஆவாஸ் பிளஸ் பட்டியலில் உள்ள நிலமற்ற பயனாளிகள் எவரேனும், இடம் பெற்றிருப்பின் அவர்களை கண்டறிந்து வீட்டுமனைப் பட்டா வழங்கிட பணிக்குழுக்கள் மூலம் வீட்டுமனை பட்டா வழங்கும் வகையில் ஆட்சேபனை அற்ற, அரசு புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து பட்டா வழங்குவது தொடர்பாக விவாதிக்க வேண்டும். மேலும், நிலமற்ற பயனாளிகளை கண்டறிந்து எவரேனும் இருந்தால் நிலம் வழங்க அனுமதி ஆணை வழங்க கிராம சபையில் ஒப்புதல் பெறுதல் வேண்டும்.
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின்கீழ், கட்டி முடிக்கப்படாத வீடுகளை விரைந்து கட்டி முடிக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவை, பொதுமக்களின் இத்திட்டம் சார்ந்த குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு இயக்கக அளவில் மக்கள் குறைதீர் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையம் திங்கள் முதல் வெள்ளி காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை இயக்கத்தில் இருக்கும். பொதுமக்கள் 8925422215 மற்றும் 8925422216 என்ற தொலைபேசி எண்ணிற்கு தங்களின் குறைகளை, நேரடியாக தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.