கர்நாடக மாநிலம் முழுவதும் வறண்ட வானிலை தொடர்வதால் வெயில் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அங்கு முன் கூட்டியே கோடை தொடங்குகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது காலை நேரத்தில் குளிர் நிலவி வருகிறது. ஆனால், பெங்களூரு போன்ற இதமான வானிலை நகரத்தில் கடந்த 12ஆம் தேதி கடுமையான வெயில் வாட்டி வதைத்ததாக சொல்லப்படுகிறது. இந்த சீசனில் அன்றைய தினம்தான் அதிகபட்சமாக 33.6 டிகிரி வெப்பநிலை பதிவாகியிருந்தது.
இது பொதுவாக ஏப்ரல் மாதங்களில்தான் பெங்களூரில் இருக்கும். ஆனால், தற்போதே அங்கு வெயில் கொளுத்து வருகிறது. இதுகுறித்து நம்ம கர்நாடகா வெதர் எனும் எக்ஸ்வலை தள பக்கத்தில், தற்போது பெங்களூரில் உள்ள வெப்பநிலை, இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக உள்ளது. இதை பார்க்கும் போது முன்கூட்டியே கோடை காலம் தொடங்கி விட்டதா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், இரவு நேரங்களில் வெப்பநிலை 16 டிகிரியாக இருப்பதால் குளிர் நிலவுகிறது. இது போன்று சீசனே இல்லாமல் பெங்களூரில் வெப்பம் ஏற்படுவதற்கு உலகம் வெப்பமயமாதல் காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
பெங்களூர் போன்ற நகரங்களில் வெயில் காலம் என்றாலும் கூட, அங்கு அதிகம் வெயில் வாட்டி வதைக்காதாம். புழுக்கமும் இருக்காதாம். ஆனால், இம்முறை கோடை தகிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இவை அனைத்திற்கும் உலக வெப்பமயமாதல் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, மகா சிவராத்திரியையொட்டி பெங்களூருவில் கோடை தொடங்கலாம் என தெரிகிறது.