இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று டாடா கர்வ் (Tata Curvv). இது டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் அடுத்த தலைமுறை கார்களில் ஒன்று. எனவே முற்றிலும் ஒரு புதிய பரிமாணத்தில் டாடா கர்வ் காரை நாம் எதிர்பார்க்க முடியும். டாடா கர்வ் கார் மொத்தம் 2 வெர்ஷன்களில் விற்பனைக்கு வரவிருப்பது ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவை எலெக்ட்ரிக் (Electric) மற்றும் வழக்கமான ஐசி இன்ஜின் வெர்ஷன்கள் ஆகும். இதில், ஐசி இன்ஜின் வெர்ஷன்தான் முதலில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடுமையான போட்டி நிறைந்த மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில், டாடா கர்வ் ஐசி இன்ஜின் வெர்ஷன் நிலைநிறுத்தப்படவுள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய கார்களுடன் டாடா கர்வ் போட்டியிடும். இதுதவிர எம்ஜி அஸ்டர், ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகிய கார்களுக்கும், டாடா கர்வ் காரின் ஐசி இன்ஜின் வெர்ஷன் விற்பனையில் சவால் அளிக்கும்.
வரும் 2024ம் ஆண்டின் தொடக்கத்திலேயே டாடா கர்வ் ஐசி இன்ஜின் வெர்ஷன் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதை தொடர்ந்து 2024ம் ஆண்டிலேயே டாடா கர்வ் எலெக்ட்ரிக் காரும் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா கர்வ் ஐசி இன்ஜின் வெர்ஷனில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 125 ஹெச்பி பவர் மற்றும் 225 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய 2 கியர் பாக்ஸ் ஆப்ஷன்களுமே வழங்கப்படும். மறுபக்கம் டாடா கர்வ் எலெக்ட்ரிக் காரில், ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 400-500 கிலோ மீட்டர் வரை பயணிக்க கூடிய பேட்டரி வழங்கப்படலாம்.