புதுச்சேரியை அடுத்த திருகாஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (67). இவரது மனைவி லதா. இவர்களது மகன் புகழ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. 5 வருடமாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், பெற்றோரின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் இருந்த தாய், தந்தையை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டு, உறவினர் வீட்டிற்கு இயல்பாக சாப்பிட சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து தட்சிணாமூர்த்தி, லதா இருவரும் சம்பவத்தன்று இரவு வீட்டில் தீ காயங்களுடன் உயிருக்கு போராடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார், இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், லதா சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். தட்சிணாமூர்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து போலீசார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரிக்கும் போது, புகழ் கஞ்சா போதைக்கு அடிமையாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும், இதனால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டதாக மாறியதும் தெரியவந்தது. இதனையடுத்து புகழை கைது செய்த போலீசார், அவரை காலப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.