நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகளை 3 நாட்களுக்குள் கேரள அரசாங்கமே பொறுப்பேற்று அகற்ற வேண்டும் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு.
கேரளாவின் மருத்துவ மற்றும் இறைச்சிக் கழிவுகள் தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கொட்டப்பட்டு வருகிறது. திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அருகே நடுக்கல்லூர், பழவூர் பகுதியில் நேற்று முன்தினம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் கேரளாவின் மருத்துவக் கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டு இருந்தன. இதற்கு பெரும் கண்டனம் எழுந்த நிலையில் தமிழக-கேரளா எல்லையான புளியரை சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், கேரள மாநிலம் தொடர்பான வழக்கு ஒன்று நடந்து கொண்டிருந்தபோது, மருத்துவ கழிவுகள் கொட்டப்படும் விவகாரம் குறித்து தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, உறுப்பினர் சத்யகோபால் அமர்வு, கேரள மருத்துவக்கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உயர் அதிகாரிகள் நேரில் ஆஜராக தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகளை 3 நாட்களுக்குள் கேரள அரசாங்கமே பொறுப்பேற்று அகற்ற வேண்டும் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கழிவுகளை கேரளாவுக்கே கொண்டு செல்ல வேண்டும் அல்லது நெல்லை மாவட்டத்தில் இக்கழிவுகளை மேலாண்மை செய்யும் ஒரு நிறுவனத்திடம் கேரள அரசு இதை வழங்க வேண்டும் என தாமாக முன்வந்து தொடர்ந்த வழக்கில் NGT(SZ) உத்தரவு பிறப்பித்தது.