முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண விசாரணை தொடர்பான அறிக்கைகளை சட்டப்பேரவையில் வைப்பதற்கு தமிழ்நாடு அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 22.09.2016 அன்று மருத்துவமனையில்அணுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள் குறித்தும், அதைத் தொடர்ந்து 05.12.2016 அன்று அவரது மரணம் வரையிலும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாகவும் விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதியரசர் ஆறுமுகசுவாமி விசாரணை ஆணையத்தால் 27.08.2022 அன்று அரசுக்கு. அளிக்கப்பட்ட அறிக்கையும் அமைச்சரவையின் முண்வைக்கப்பட்டது.
இவ்வறிக்கை குறித்து அமைச்சரவை விரிவாக விவாதித்தது. விசாரணை ஆணையத்தின்அறிக்கையை அமைச்சரவை பரிசீலித்து, அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சசிகலா, சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய தலைமைச் செயலாளர் டாக்டர் இராம மோகன ராவ் உள்ளிட்டவர்கள் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் மீது சட்டவல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவும், உரிய நடவடிக்கைகள் மேற்கொண்ட பின்னர், அதற்கான விபர அறிக்கையுடன், ஆணையத்தின் அறிக்கையை, தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைக்கவும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.