கோவில்களில் நடத்தப்படும் இலவச திருமண திட்டத்திற்கு ரூ.50 ஆயிரம் வழங்குவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள ஏழை பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமாக தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை திட்டமாகும்.. இந்த திட்டத்தில் தாலிக்கு தங்கம் என்பது பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கம் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் கோவில்களில் நடத்தப்படும் இலவச திருமண திட்டத்திற்கு ரூ.50 ஆயிரம் வழங்குவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் இலவச திருமணங்களை நடத்துவதற்காகத் திட்டச் செலவினத் தொகையான 20 ஆயிரத்தை 50 ஆயிரமாக உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, திருமாங்கல்யம் 4 கிராம் – ரூ. 20,000, மணமகன் ஆடை ரூ. 1000, மணமகள் ஆடை – ரூ.2000 மணமகன், மணமகள் வீட்டார் 20 நபர்களுக்கு உணவு – ரூ. 2000, மாலை – புஷ்பம் – ரூ. 1000, பீரோ – ரூ. 7800, கட்டில் ரூ. 7500, மெத்தை – ரூ. 2200, தலையணை 2 – ரூ. 190, பாய் – ரூ. 180, கை கடிகாரம் – ரூ. 1000, மிக்ஸி – ரூ. 1490, பூஜை பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் – ரூ.3,640 என மொத்தமாக 50,000 ரூபாய்க்கான பொருட்கள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும்.
