fbpx

என்னது பாமக-வுக்கு இரட்டை நாக்கா..? அமைச்சர் எ.வ.வேலுவுக்கு அன்புமணி சரமாரி கேள்வி…!

சிப்காட் வளாகங்கள் அமைப்பதற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்பதை கொள்கை அறிவிப்பாக தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தருமபுரியில் சிப்காட் அமைக்க வேண்டும் என்று பாமக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஜி.கே.மணி விடுத்த கோரிக்கைக்கு எந்த தொடர்பு இல்லாமல் பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு,’’தருமபுரியில் சிப்காட் கேட்கும் பாமக திருவண்ணாமலையில் சிப்காட் கூடாது என்கிறது. அப்படியானால் பாமகவுக்கு இரட்டை நாக்கா.?” என்று வினா எழுப்பியுள்ளார். எத்தனை முறை பதிலளித்தாலும் புரிந்து கொள்ளும் திறன் இல்லாத அமைச்சர் எ.வ.வேலு அவர்களை நினைத்து நான் பரிதாபப்படுகிறேன்.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு வழிகோலும் வகையில் சிப்காட் தொழில்பேட்டைகளை அமைக்க வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இன்னும் கேட்டால் தருமபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் சிப்காட் வளாகங்களை அமைக்க வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றதே பாட்டாளி மக்கள் கட்சி தான். இந்த உண்மைகள் எல்லாம் அரசியலை சேவையாக செய்யாமல், வணிகமாக செய்யும் அமைச்சர் எ.வ.வேலு போன்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட சிப்காட் வளாகங்கள் தேவை. ஆனால், அதற்காக வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படக்கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. தருமபுரியில் சிப்காட் வேண்டும் என்பதில் பா.ம.க. உறுதியாக இருக்கிறது என்பது மட்டுமல்ல. கலைஞர், ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சியில் தொடர்ந்து வலியுறுத்தி தருமபுரி மாவட்டத்தில் சிப்காட்டைக் கொண்டு வந்ததே பா.ம.க. தான். இதற்காக சட்டப்பேரவையில் ஜி.கே.மணி உள்ளிட்ட பா.ம.க. உறுப்பினர்கள் பலமுறை குரல் கொடுத்துள்ளனர். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது தருமபுரி மக்களவை உறுப்பினர் என்ற முறையில் நான் பலமுறை கடிதம் எழுதித் தான் அதை சாதித்துக் காட்டினேன்.

ஆனால், தருமபுரி சிப்காட்டுக்காக விளைநிலங்கள் பறிக்கப்படவில்லை. நல்லம்பள்ளி வட்டத்தில், 1,183 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம், 550 ஏக்கர் பட்டா நிலம் என மொத்தம் 1,733 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் வளாகம் அமைந்திருக்கிறது. கையகப்படுத்தப்பட்ட பட்டா நிலங்களில் பெரும்பான்மையானவை விளைநிலங்கள் அல்ல. அனைத்து நில உடமையாளர்களிடமும் பேசி சுமூகமாகத் தான் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இப்போதும் கூட 550 ஏக்கர் புறம்போக்கு நிலங்கள் தருமபுரி சிப்காட்டுடன் இணைக்கப்படவுள்ளதாக அரசு கூறியிருக்கிறது. அதை பாட்டாளி மக்கள் கட்சி முழுமனதுடன் வரவேற்கிறது.

திருவண்ணாமலை மேல்மா சிப்காட் விவகாரம் அப்படி அல்ல. செய்யாறு சிப்காட் வளாகத்தை விரிவுபடுத்த மேல்மா, தேத்துறை, இளநீர்குன்றம், குறும்பூர், நர்மாபள்ளம். அத்தி, வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களில் 2700 ஏக்கர் நிலங்களை தமிழக அரசு கட்டாயமாக பறிக்கத் துடிக்கிறது. அவை அனைத்தும் முப்போகம் விளையும் நிலங்கள். உழவர்கள் மீது அக்கறை கொண்ட எவரும் இதை வேடிக்கைப் பார்க்க மாட்டார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களும், தரிசு நிலங்களும் ஆயிரக்கணக்கான ஏக்கர் உள்ளன. தமிழக அரசு நினைத்தால் அங்கு சிப்காட் அமைக்கலாம். ஆனால், அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் சொந்த நலனுக்காக விளைநிலங்களை பறித்து சிப்காட் அமைக்க அரசு துடிக்கிறது. அதற்காக உழவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது உள்ளிட்ட அனைத்து அடக்குமுறைகளையும் திமுக அரசு கட்டவிழ்த்து விட்டு வருகிறது. அமைச்சரின் தூண்டுதலில் நடந்த இந்த அடக்குமுறைகளை முதலமைச்சர் அமைதியாக வேடிக்கைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

பா.ம.க.வுக்கு இரட்டை நாக்கா? என எ.வ.வேலு இப்போது கேட்கவில்லை. மேல்மா உள்ளிட்ட கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்த முடியவில்லையே? என்ற எரிச்சலில் ஏற்கனவே இப்படிக் கேட்டவர் தான் அவர். 2023-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் நாள் மேல்மாவில் பா.ம.க. சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போதே அவருக்கு நான் பதில் கூறியிருந்தேன். ஆனாலும், மேல்மா சிக்கலில் அவருக்கு கிடைத்த தோல்வியை மறக்க முடியாததால் மீண்டும், மீண்டும் வயிற்றெரிச்சலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அமைச்சர் வேலு அவர்களாக இருந்தாலும், வேறு எவராக இருந்தாலும் வயிற்றுப் பசியைப் போக்க உணவைத் தான் உண்ண வேண்டும். அதற்கு நிலங்கள் கட்டாயம் தேவை. விளைநிலங்களை அழித்து தொழிற்சாலைகளை அமைத்தால், அதில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை உண்டு உயிர்வாழ முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிப்காட் விவகாரத்தில் பா.ம.க.வுக்கு இரட்டை நாக்கா? என்று கேட்கும் திமுகவுக்கு தமிழகத்தின் முதன்மைச் சிக்கல்களில் எத்தனை வாய்கள்? என்று கேட்டால் எண்ணுவதற்கு எண்கள் இல்லை.

ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என்பார்கள்… ஆட்சிக்கு வந்த பின் மதுவிலக்கு முடியாது என்பார்கள். எட்டுவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குகளை வாங்குவார்கள்… ஆட்சிக்கு வந்தால் நிலங்களை கையகப்படுத்தாமல் வானத்திலா சாலை அமைக்க முடியும்? என்பார்கள். கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் சிப்காட் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் விளைநிலங்களை கையகப்படுத்தும் முடிவை கைவிடுவார்கள்…. மேல்மாவில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பார்கள்.

மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவேன் என வீர வசனம் பேசுவார்கள், காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் வந்தால் நானும் டெல்டாக் காரன் என்பார்கள்….. ஆனால், கடலூர் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கத்திற்காக பாட்டாளி மக்களிடமிருந்து நிலங்கள் பறிக்கப்பட்டால் வாய்மூடி மவுனியாகி விடுவார்கள். திமுகவின் இரட்டை நிலைப்பாடுகளை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. எனவே, அடுத்தவர்கள் மீது அவதூறு பரப்புவதை கைவிட்டு, சிப்காட் வளாகங்கள் அமைப்பதற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்பதை கொள்கை அறிவிப்பாக தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

English Summary

The Tamil Nadu government should immediately issue a policy statement stating that agricultural lands will not be acquired for the construction of SIPCOT complexes.

Vignesh

Next Post

இவர்கள் ஜூன் 30ஆம் தேதி வரை அரசுப் பேருந்தில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்..!! அமைச்சர் சிவசங்கர் சூப்பர் அறிவிப்பு..!!

Sat Mar 22 , 2025
Minister Sivashankar has said that the free travel card for freedom fighters can be used until June 30th.

You May Like