சட்ட ரீதியில் தான், விகடன் இணையதளம் முடக்கப்பட்டது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் திமுக அரசின் ஊதுகுழலாக செயல்படும் விகடன் குழுமம் வேண்டுமென்றே பிரதமர் மோடியை இழிவுபடுத்தும் நோக்கில் செயல்படுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார். மேலும் பிரதமர் மோடி குறித்தும், மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடும் விகடன் குழுமம், அநாகரிகமான முறையில் கேலி சித்திரங்களை வெளியிடுவதாகவும் புகார் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடன் பிரதமர் மோடி நடத்திய ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தையை இழிவுபடுத்தி, பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் விதிகளை, விகடன் குழுமம் மீறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். எனவே விகடன் குழுமம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி இருந்தார். இதையடுத்து மத்திய அரசு விகடன் நிறுவனத்தின் இணையதள பக்கத்தை முடக்கியது. இது கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்த வருகின்றனர்.
சட்ட ரீதியில் தான், விகடன் இணையதளம் முடக்கப்பட்டது என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; சட்ட ரீதியில் தான், விகடன் இணையதளம் முடக்கப்பட்டது. மேலும் இணையதளம் முடக்கப்பட்டதற்கான காரணம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.