சர்வதேச அளவில் பொருளாதார நிச்சயமற்ற சூழ்நிலைக்கு மத்தியில் இந்தியாவின் பட்ஜெட்டை உலக நாடுகள் உற்று நோக்குவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கி உள்ளது.. நாளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு முன்பு பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “இன்றைய உலகளாவிய சூழ்நிலையில், இந்தியா மட்டுமல்ல, முழு உலகமும் இந்தியாவின் பட்ஜெட்டை பார்த்துக் கொண்டிருக்கிறது.. ” என்று இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி கூறினார்.
மேலும் பேசிய அவர் “ ஸ்திரமற்ற உலகப் பொருளாதார சூழ்நிலையில், இந்தியாவின் பட்ஜெட் சாமானிய குடிமக்களின் நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முயற்சிக்கும்.. அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். முதலில் இந்தியா, குடிமக்களே முதலில்’ என்ற சிந்தனையை எடுத்துக்கொண்டு, நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னெடுத்துச் செல்வோம்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை நாடாளுமன்றத்தில் முன்வைப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.. நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி முர்மு தனது முதல் உரையை நிகழ்த்துவது முழு நாட்டிற்கும் பெருமையளிக்கிறது..” என்று தெரிவித்தார்..
இதற்கிடையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23 பொருளாதார ஆய்வறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டுக்கு ஒரு நாள் முன்னதாகவே இந்த ஆய்வறிகை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி ஆனந்த நாகேஸ்வரனின் மேற்பார்வையில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் பொருளாதாரப் பிரிவால் இந்த பொருளாதார ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..