அமெரிக்காவில் உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட சாலட்டில் மனித விரல் இருந்ததையடுத்து பெண் ஒருவர் அந்த உணவகம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
அமெரிக்காவின் கனெக்டிகட் பகுதியில் வசித்து வருபவர் அலிசன் கோஸி. இவர், நியூயார்க்கின் மவுண்ட் கிஸ்கோவில் உள்ள பிரபலமான உணவகத்தில் இருந்து சாலட் வாங்கியுள்ளார். இதில், மனித விரல் இருப்பதை கண்ட அவர் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, அந்த உணவகம் மீது அப்பெண் வழக்கு தொடர்ந்தார். புகாரில், சாலட் சாப்பிடும்போது மனித விரலை சாப்பிடுவதை உணர்ந்ததாக குறியிருந்தார். இதுதொடர்பாக வெஸ்ட்செஸ்டர் மாவட்ட சுகாதாரத் துறை விசாரணை நடத்திவந்தது.
இந்தநிலையில், வழக்கு தொடர்பான ஆவணங்களின்படி, மனித விரலின் துண்டு உணவக மேலாளருடையது என்றும், அவர், அருகம்புல் வெட்டும்போது தவறுதலாக விரல் துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. இருப்பினும், மேலாளர் சிகிச்சைக்கை மருத்துவமனைக்கு சென்றிருந்த நிலையில், அசுத்தமான சாலட்டை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த உணவகத்திற்கு $900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அந்த சாலட்டை சாப்பிட்டதால், அறிவாற்றல் குறைபாடு, தலைச்சுற்றல், குமட்டல், ஒற்றைத் தலைவலி மற்றும் கழுத்து மற்றும் தோள்பட்டை அசௌகரியங்களுக்கு ஆளானதாக கோஸி குற்றம் சாட்டினார். அமெரிக்காவில் இந்த ஆண்டு அசுத்தமான உணவுகளை வழங்கியதற்காக உணவங்கள் மீது வழக்குத் தொடரப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆகஸ்ட் மாதம், ஆலிவ் கார்டன் பகுதியில் ஒரு நபர் தனது மைன்ஸ்ட்ரோன் சூப்பில் ஒரு எலியின் கால் பகுதியைக் கண்டுபிடித்ததாகக் கூறி வழக்குத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.