2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டு முதல் படிப்படியாக குறைந்துள்ளது.. மேலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது.. அந்த வகையில் இதுவரை உருமாறிய கொரோனாவில் ஒமிக்ரான் மாறுபாடு அதிக பேரழிவை ஏற்படுத்தியது..
இந்த நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. இதற்கு ஒமிக்ரானின் XBB.1.16 என்ற துணை மாறுபாடு காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் XBB.1.16 துணை மாறுபாட்டின் பரவல் அதிகரித்துள்ளது..
இந்தியாவில் கண்டறியப்பட்ட XBB.1.16 கொரோனா மாறுபாடு, புதிய அலைக்கு வழிவகுக்கும் என்று பலர் கணித்துள்ளனர்.. புதுப்பிக்கப்பட்ட மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் 146 நாட்களுக்குப் பிறகு 1,500 க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது..
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உறுதியாகும் கொரோனா பாதிப்புகளில் 83.6% XBB வகையை சேர்ந்தது என மரபணு பகுப்பாய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி 2-வது வாரம் முதல் சேகரித்த 144 மாதிரிகளை, மரபணு ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்ததில் இந்த தகவல் கிடைத்துள்ளது. XBB வகை கொரோனாவுக்கு அடுத்தபடியாக, BA.2 வகை 13.7 சதவீதமும், BA.5 வகை 2.7 சதவீமும் கண்டறியப்பட்டுள்ளது. XBB வகை கொரோனா தொற்றை உன்னிப்பாக கவனத்து வருவதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
கோவிட் XBB 1.16 உயிருக்கு ஆபத்தானதா? கோவிட் XBB.1.16 மாறுபாடு குறித்து அதிக ஆராய்ச்சிகள் செய்யப்படவில்லை என்றாலும், இது வரை கண்டறியப்பட்ட கோவிட் துணை வகைகளில் இதுவே வேகமாகப் பரவுகிறது என்றும், சரியான முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் ஆபத்தான விகிதத்தில் பாதிப்பு அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும், XBB 1.16 மாறுபாடு காரணமாக இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை.. எனவே குழு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்க கூடும் என்றும், அதனால் தீவிர பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.. கொரோனாவின் பிற வகைகளைப் போலவே, XBB 1.16 வகை மாறுபாட்டுக்கும் காய்ச்சல், உடல் வலி, இருமல், சளி, சுவாசப் பிரச்சினைகள் மற்றும் சில சந்தர்ப்பங்களில், நீடித்த நோய் போன்ற அறிகுறிகள் உள்ளன.