மயிலாடுதுறை மாவட்டம் டவுன் ஸ்டேஷன் ரோடு தெற்கு தெருவை சேர்ந்தவர் 20 வயதான மகன் அபிநாத். இவருக்கு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து வந்த நிலையில், நவம்பர் 25 ஆம் தேதி அபிநாத் அந்த சிறுமியை காரில் அழைத்து சென்றுள்ளார். அப்போது தனது நண்பர் 5 பேரை அங்கு வரவைத்த அபிநாத் நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளான். இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளான்.
சம்பவத்தன்று இரவில் வீடு திரும்பிய அந்த பெண் தன் தந்தையிடம் நடந்ததை கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த தந்தை மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மகளுடன் சென்று அபிநாத் மீது புகார் அளித்தார். அந்த புகாரை தொடர்ந்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சுகந்தி மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் அடிப்படையில் அபிநாத் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அபிநாத்தை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பாலியல் துன்புறுத்தலில் அபிநாத் ஈடுபட அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர்கள் 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின் விடுத்த செய்திக்குறிப்பில், சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும், காவல்துறைக்கு கிடைத்த புகார் மனுக்களின் உண்மை தன்மை ஆராய்ந்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், வழக்கு விசாரணை காலங்களில் இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வழக்கில் குளறுபடி உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Read more ; இவ்வளவு மலிவு விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரா..? இத்தனை வசதிகள் இருக்கா..? பேட்டரி தான் ஹைலெட்..!!