குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த பெண் ஒருவர், சிஏ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க கடந்தாண்டு டிசம்பர் 7, 18ஆம் தேதிகளில் மதுரை வந்தார். பின்னர், தெப்பக்குளம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். அந்த ஓட்டலில் அந்த பெண்ணுக்கு நன்கு தெரிந்த சென்னையை சேர்ந்த அஷீஷ் ஜெயின் (23) என்பவர் அவரது அறைக்கு அருகில் மற்றொரு அறை எடுத்து தங்கியுள்ளார். மறுநாள் டிச.17ஆம் தேதி அந்த பெண் கலந்தாய்வு கூட்டத்திற்கு செல்லும்போது, உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அஷீஷ் ஜெயினிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது கலந்தாய்வில் கலந்துகொள்ள வந்து, அதே விடுதியில் தங்கியிருந்த காஞ்சிபுரம் மாடவாக்கத்தைச் சேர்ந்த ஜெரோம் கதிரவன் (22) என்பவருக்கு போன் செய்து, அந்த பெண்ணிற்கு தேவையான சாப்பாடு, மருந்துகள் வாங்கி வரச் சொல்லி இருக்கிறார். அதன்படி அவரும் உணவு, மருந்து பொருட்களை வாங்கிவந்துள்ளார். ஆனால், ஜெரோம் கதிரவன் வாங்கி வந்த உணவினை சாப்பிட்ட பெண் அடுத்த சில நிமிடங்களில் மயங்கி விழுந்தார். இதை தொடர்ந்து ஜெரோம் கதிரவன், அஷீஷ் ஜெயின் இருவரும் தனித்தனியே அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மயக்கம் தெளிந்தபிறகு தான் தனக்கு நடந்த கொடூரம் அப்பெண்ணுக்கு தெரியவந்துள்ளது.
தன் நிலையை எண்ணி அதிர்ச்சி அடைந்த அப்பெண், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை நகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் அளித்தார். அதன்பேரில், கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி மதுரை நகர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது உறுதியான நிலையில், இந்த கொடூரத்தில் ஈடுபட்ட அஷீஷ் ஜெயின், ஜெரோம் கதிரவன் ஆகிய 2 பேரையும் கைது சிறையில் அடைத்தனர்.