பள்ளிக்கல்வித் துறையின் வாயிலாக ஜனவரி 2023 முதல் 6-9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ‘தேன்சிட்டு இதழ் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கும் வகுப்பறைக்கு ஒன்று என்ற முறையிலும் ஆசிரியர்களுக்காக “கனவு ஆசிரியர்” இதழ் பள்ளிக்கு ஒன்று என்ற விதத்திலும் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் அஞ்சல் வழியாக அனுப்பப்பட்டு வருகிறது.
இதே போன்று, ஜூன் 2023 முதல் 4,5 வகுப்பு மாணாக்கருக்காக “புது ஊஞ்சல் “ இதழ் அனைத்து அரசு தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளுக்கும் வகுப்பறைக்கு ஒன்று என்ற வகையில் அனுப்பப்பட்டு வருகிறது. இதுவரை, சிறார் மற்றும் ஆசிரியர் இதழ்களில் அரசுப்பள்ளி மாணவர்களின் ஓவியங்கள், கவிதைகள், கதைகள், கட்டுரைகள் உள்ளிட்ட படைப்புகள் ஒரு பகுதியாக இடம்பெற்றுவந்தன. தற்போது, நவம்பர் 14ஆம் நாள் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி தேன்சிட்டு மற்றும் புது ஊஞ்சல் இதழ்களில் மொத்தமுள்ள தலா 24 பக்கங்களிலும் 104 அரசுப்பள்ளி மாணவர்களின் படைப்புகளே இடம்பெற்றிருக்கின்றன.
வரும் 16 நவம்பர் தேன்சிட்டு மற்றும் புது ஊஞ்சல் இதழ்களிலும் அரசுப்பள்ளி மாணவர்களின் படைப்புகளையே முழுமையாக இடம்பெற வைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இம்முயற்சி பள்ளிக்கல்வியில் மட்டுமின்றி பத்திரிகை உலகிலும் புதுமையான முயற்சியாகக் கவனம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, வழக்கம் போன்று மாணவப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு அம்மாணவர் பெயரில் அவர்களின் படைப்புகள் இடம்பெற்று இருக்கும் இதழ்கள் ஒவ்வொரு முறையும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
அதேபோன்று, நவம்பர் முதல் மற்றும் மூன்றாம் வாரங்களில் பள்ளிகளை வந்தடையும் மாணவர் பெயருள்ள இதழ்களை பள்ளியில் நடைபெறும் காலை வணக்கக் கூட்டத்தில் அனைவர் முன்னிலையிலும் அம்மாணவரை அறிமுகப்படுத்திப் பாராட்டி அவருக்கு வழங்கப்பட்டுள்ள இதழை அளித்திடுமாறு சார்ந்த பள்ளித்bதலைமையாசிரியர்களை அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.