அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக விஜய் எழுதிய கடிதத்தில், அன்புத் தங்கைகளே..! கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் தாய்மார்கள், என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்பு பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளை கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன்.
யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது..? நம்மை ஆளும் ஆட்சியாளர்கள எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை. அதற்காகவே இக்கடிதம். எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் நிற்பேன் அண்ணனாகவும், அரணாகவும். எனவே, எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம். அதற்கான உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே சாத்தியப்படுத்துவோம்“ என்று எழுதியிருந்தார்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். ஆளுநரை மதியம் 1 மணிக்கு ராஜ்பவனில் விஜய் சந்திக்க உள்ளார். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளிக்கவுள்ளதாக தெரிகிறது.